தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, பா.ஜ.க.விலிருந்து விலகிய கே.அண்ணாமலை புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாகவும், வரும் பொதுத்தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதில், “கடந்த 2002 முதல் 2026 வரை அனைத்து விதமான கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழக மண்ணில் வேரூன்ற முடியாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. அமைப்புகளின் புதிய திட்டம் (Plan B) இதுதானா?” என்ற அதிரடி கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
மேலும் அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வை “முகமூடி அரசியல்” என விமர்சித்துள்ள மாணிக்கம் தாகூர், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அனுமதியுடனும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்துடனும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பெயர்கள் இல்லாத ஒரு புதிய முகமூடி தமிழகத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். கட்சியின் பெயர் வேண்டுமானால் புதியதாக இருக்கலாம், ஆனால் அதன் கொள்கையும், கட்டுப்பாடும், நோக்கமும் ஆர்.எஸ்.எஸ்-இன் பழைய கொள்கைகளே என்று சாடியுள்ள அவர், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த ‘பிளான் பி’ (Plan B) உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். முகமூடிகள் மாறினாலும் அதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதைத் தமிழக மக்கள் கடந்த காலங்களைப் போலவே இப்போதும் சரியாக அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
