இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமில்லாமல், தனிநபர்கள் தங்களின் கருத்துக்களை உலகிற்கு உரக்கச் சொல்லும் வலிமையான தளமாக மாறியுள்ளன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பிரபல உள்ளடக்க உருவாக்குநரான அனிதா பிஷ்னோய், பெண்களின் ஆடை வடிவமைப்பு மற்றும் நவீன கலாச்சாரம் குறித்து வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், “ஆடைகள் சிறியதாகிவிட்டன, பிறகு வெட்கம் எங்கே இருந்து வரும்… உணவுகள் பிரெட்டாக மாறிவிட்டன, பிறகு உடலுக்குத் தெம்பு எங்கே இருந்து வரும்…” என்று அவர் பேசியிருந்தார். பாரம்பரிய கலாச்சாரத்தை ஆதரித்துப் பேசப்பட்ட இந்த கருத்து, சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பு விவாதங்களாக மாறி, அனிதா பிஷ்னோய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் ட்ரோல்களும் குவியத் தொடங்கின.
தொடர் விமர்சனங்கள் மற்றும் ஆன்லைன் கேலி சித்திரங்களால் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா பிஷ்னோய், இறுதியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்து கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளார். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட அவர் பேசுகையில், சிலர் திட்டமிட்டே தனது நற்பெயரைக் கெடுக்க முயல்வதாகவும், தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், “ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது; எனது கருத்துக்களில் யாருக்கேனும் உடன்பாடு இல்லை என்றால், சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சிப்பதை விடுத்து, நேரடியாக வந்து பேசலாம் அல்லது சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளலாம்” என்று அவர் சவால் விடுத்துள்ளார். இச்சம்பவம் தற்போது வடமாநில நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
