மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்த சுல்தான் ஷேக் என்ற 3 வயது சிறுவன், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். இடுப்பில் பாம்பு கடித்ததால் சிறுவன் அலறித் துடித்ததைக் கண்ட பெற்றோர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காமல், “எந்தப் பாம்பு கடித்தது என்று தெரிந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும். எனவே கடித்த பாம்பை புகைப்படம் எடுத்துக் காட்டுங்கள்” என்று மருத்துவர்கள் பிடிவாதம் பிடித்ததாகப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாம்பின் புகைப்படத்தைத் தேடுவதிலும், மருத்துவர்களின் இந்த விசித்திரமான நிபந்தனையாலும் விலைமதிப்பற்ற மருத்துவ நேரம் வீணடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படத்தால் விஷம் உடல் முழுவதும் பரவி சிறுவன் துடிதுடித்து உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், சிறுவனைக் கொண்டு வரும்போதே அவனது நிலைமை மோசமாக இருந்ததாகவும், தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் விஷம் வேகமாகப் பரவியதால் சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
