மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், குடிகாரக் கணவன் பெற்ற மகனையே தலைகீழாகத் தொங்கவிட்ட கொடுமையைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவி, கணவனைத் தடியால் அடித்துக் கொலை செய்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் தாய் வீட்டில் வசித்து வந்த நீலம் குஷ்வாஹா (27) என்ற பெண்ணின் வீட்டிற்குள், ஜூன் 1 அன்று அவரது கணவர் தீன்தயாள் குஷ்வாஹா குடிபோதையில் கதவை உடைத்துக்கொண்டு அத்துமீறி நுழைந்துள்ளார்.

வந்தவர் சும்மா இருக்காமல், தன் சொந்த மகனையே கொடூரமான முறையில் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியும் பயமும் அடைந்த நீலம், தன் குழந்தையைக் காப்பாற்ற வேறு வழியின்றி, அருகில் இருந்த தடியை எடுத்து கணவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தீன்தயாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவன் இறந்த அதிர்ச்சியில், அந்தப் பெண் விடிய விடிய சுமார் 8 மணி நேரம் பிணத்தின் அருகிலேயே அழுதுகொண்டு அமர்ந்திருந்துள்ளார். விடிந்ததும் அருகில் உள்ள மகாவீர் கோவிலுக்குச் சென்று, தான் செய்த பாவத்திற்கு இறைவனிடம் சுமார் 10 நிமிடங்கள் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதன் பிறகு, நேராக காவல் நிலையத்திற்குச் சென்று, “என் கணவரைக் கொலை செய்துவிட்டேன்” என்று கூறி தானாகவே சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கட்டிலில் கிடந்த தீன்தயாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையைத் துன்புறுத்தியது மற்றும் குடும்ப வன்கொடுமை ஆகிய கோணங்களில் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.