மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள து.நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பவர், பால்பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனது மகளும், 13 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படிப்பதால், இருவரையும் ஒரே வேளையில் பள்ளியில் இருந்து மோட்டார்சைக்கிளில் அழைத்து வருவதாக தெரியவந்துள்ளது. ஆனால், அந்த நட்பு மோசமான பாதையில் முடிந்துள்ளது.
சமீபமாக அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனைக்குப் பின் வெளிவந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிறுமி ஏற்கனவே 5 மாத கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை கேட்டு கதறிய பெற்றோர், சிறுமியை விசாரித்தபோது, சதீஷ்குமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாகவும், யாரிடமும் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், சதீஷ்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர். உசிலம்பட்டி காவல் துணை சூப்பிரண்டின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
