கேரள மாநிலம் சஸ்தம்கோட்டா அருகே உள்ள ஒரு பள்ளியில், 15 வயதான மாணவர் மிதுன், சகப் பள்ளி மாணவரின் செருப்பை எடுக்க முயன்ற போது, பள்ளி வளாகத்தில் குறைந்த உயரத்தில் தொங்கிய மின்கம்பியில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியது.
சம்பவத்தன்று காலை ட்யூஷனுக்குப் பிறகு பள்ளிக்கு சென்ற மிதுன், தனது வகுப்பறையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. அவருடைய நண்பரின் செருப்பு சைக்கிள் ஷெட்டின் மேல் விழ, அதை எடுக்க மேலே ஏறிய மிதுன், தற்செயலாக மூன்று பஸ் மின் வயரைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கியதாகத் தெரிய வருகிறது.
இந்த துயரச் சம்பவம் நேர்ந்தபோது, உடற்கல்வி ஆசிரியர் மிதுனை காப்பாற்ற ஓடியபோதும், உடனடி உதவிக்காக மற்ற ஆசிரியர்களின் உதவியுடன் மேடையை பயன்படுத்தி மின்சாரத்திலிருந்து பிரித்தனர். உடனே அருகிலுள்ள சஸ்தம்கோட்டா தாலுக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், மருத்துவர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
சுஜா – மனு தம்பதிகளின் மகனான மிதுன், குடும்பத்தில் முத்த சிறுவன். அவரது தாய் சுஜா தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில், தன் மகனின் மரணத்தை வீடியோ காலின் மூலமாக அறிந்து பேரதிர்ச்சியடைந்துள்ளார். சுஜா நாடு திரும்பிய பின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மிதுனின் இளைய சகோதரர் சுஜின் செய்தியாளர்களிடம் கூறியபோது, “அண்ணன் காலை பள்ளிக்குச் செல்லும்போது ‘மாலை எனக்காக சாப்பாடுக் கட்டி வையு’ன்னு சொன்னார். ஆனால் அவருக்கு தெரியாம, தாத்தா பாட்டி என்ன கூட்டிக் கொண்டுப்போனா… அண்ணனுக்கு ஆர்மி ல சேரணும் என்பது ஆசை…” என கூறியபோது சோகத்தில் கண்ணீர் வடித்தார்.
இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் மின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக உள்ளதை வெளிச்சமிட்டுள்ளதுடன், மாணவர்கள் பாதுகாப்பு குறித்து பள்ளி நிர்வாகங்கள் கடும் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
