உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் கல்லூரிக்குச் சென்ற எம்.எஸ்சி. மாணவி மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது காதலனின் வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஹனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷ்ரேயா உபாத்யாய் என்ற மாணவி, ஜகத்பூர் பி.ஜி. கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை தேடி வந்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு மூடப்பட்டிருந்த ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, குளியலறையில் மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாணவியின் செல்போன் இருப்பிடத்தை போலீசார் கண்காணித்தபோது, பச்சாவ் பகுதியில் உள்ள மால்வியா இன்டர் கல்லூரி அருகே இருப்பிடம் பதிவாகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வாடகை வீட்டின் குளியலறையில் சடலம் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆரம்பகட்ட விசாரணையில், காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மாணவியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் விவேக் சௌபே என்பவரும் சம்பவத்துக்குப் பிறகு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

போலீசாரின் தகவலின்படி, ஷ்ரேயாவுக்கும் விவேக் சௌபேவுக்கும் முன்பே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. விவேக்கின் உறவினர்கள் வசிக்கும் பகுதியில் அவர் அடிக்கடி வந்து சென்றபோது ஷ்ரேயாவுடன் அறிமுகம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஷ்ரேயாவுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் விவேக் அதிருப்தியடைந்ததாகவும், ஷ்ரேயாவை திருமணம் செய்து கொள்ள அவர் வற்புறுத்தியதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஷ்ரேயா குடும்பத்தின் ஒரே மகள் என்பதுடன், எதிர்காலத்தில் அவருக்கு குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் ஏழு பிகா நிலம் கிடைக்க இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த சொத்து மீது விவேக்குக்கு ஆசை இருந்ததாகவும், திருமணம் நடந்தால் அந்த நிலம் தன்னிடம் வந்துவிடும் என அவர் நினைத்ததாகவும் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே ஷ்ரேயாவுக்கு திருமணம் வேறு இடத்தில் நிச்சயிக்கப்பட்டதை அவர் எதிர்த்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆகஸ்ட் 18-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றபோது ஷ்ரேயாவை விவேக் அழைத்துச் சென்று தனது வாடகை வீட்டில் கொலை செய்திருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில், போலீசார் விவேக்கை தேடி வருகின்றனர்.