மாநிலத்தின் கடன் சுமையை அதிகரிக்காமல் மகளிர் உரிமைத் தொகையை மாதந்தோறும் ₹2,500 ஆக உயர்த்திக் கொடுத்தால் மட்டுமே முதல்வர் விஜய்யைப் “புத்திசாலி சிஎம்” என ஏற்றுக்கொள்ள முடியும் என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

​செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஒருவேளை கடன் வாங்காமல் இந்தத் தொகையை உயர்த்திக் கொடுக்கத் தவறினால், தனது முதலமைச்சர் பதவியை விஜய் ராஜினாமா செய்யத் தயாரா? என்றும் காரசாரமான கேள்விகளை எழுப்பினார்.

​ஆட்சிக்கு வந்தவுடனேயே மாநிலத்தில் கடன் சுமை மிக அதிகமாக இருக்கிறது எனத் தொடர்ந்து கூறிவந்த தவெக அரசு, தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) புதிய கார்கள் வழங்கும் திட்டங்களை அறிவித்து வருவதாகக் கூறி கடுமையாகச் சாடினார். கடன் சுமையைச் சுட்டிக்காட்டும் அரசு, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பதிலாகச் சொகுசு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

​தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே பல்வேறு அரசியல் நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் எம்எல்ஏக்களுக்கான கார் அறிவிப்பு குறித்து ஆர்பி உதயகுமார் எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தவெக தொண்டர்களிடையேயும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.