உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இனிப்புக் கடையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இனிப்புகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
ஆய்வின் போது, கடை உரிமையாளரான அன்னி பாபாவிடம், அங்கிருந்த வெள்ளித் தகடு பதித்த ஒரு இனிப்புத் துண்டைக் கொடுத்து அதைச் சாப்பிட்டுப் பார்க்கும்பறு அதிகாரிகள் கூறினர். ஆனால், தனது சொந்தக் கடையில் விற்கப்படும் அந்த இனிப்பைச் சாப்பிட கடை உரிமையாளர் மீண்டும் மீண்டும் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவர் ஒரு சிறு துண்டைக் கூட வாயில் வைக்காதது அங்கிருந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடைக்காரர் சாப்பிட மறுத்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த இனிப்பின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த இனிப்பில் தடைசெய்யப்பட்ட வெள்ளித் தகடு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், கடையில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்டக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், உணவுத் துறை உதவி ஆணையர் கௌரி சங்கர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி மிருத்யுஞ்சய் குமார் தலைமையில் இந்த ஆய்வுப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. பண்டிகைக் காலத்தில் இனிப்புகளில் செய்யப்படும் கலப்படங்களைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று மௌதஹா துணைப் பிரிவு ஆட்சியர் கர்ணவீர் சிங் கூறியுள்ளார்.
A sweet shop owner refused to eat sweet from his shop when offered by a cop during a raid by the food department in Hamirpur district of UP. pic.twitter.com/elb2BLnk9R — Piyush Rai (@Benarasiyaa) August 21, 2026 “>
தன் கடையில் விற்கும் இனிப்பையே கடைக்காரர் சாப்பிட மறுத்த இந்தச் சம்பவம் முழுமையாக வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு விற்கும் பொருளை உரிமையாளரே சாப்பிடப் பயப்படுவது ஏன் என்ற கேள்வியும், கலப்படம் குறித்த அச்சமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
