செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியில், தனது மகளைக் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்த சம்பவத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஏழுமலை மற்றும் பெண்ணின் சகோதரர் கௌதம் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட பிரவீனும் பெண்ணும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், பொருளாதார அந்தஸ்து காரணமாகவே இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிரவீன் படுகொலை செய்யப்பட்ட செய்தி பரவியதைத் தொடர்ந்து,  கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மற்றும் பகுதியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

இந்த சம்பவத்தில்  விரைந்து செயல்பட்ட கேளம்பாக்கம் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பிரதான குற்றவாளியான தவெக நிர்வாகி ஏழுமலை, பெண்ணின் சகோதரர் கௌதம் உட்பட 4 பேரைக் கைது செய்தனர்.

மேலும், இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையின் தலைவனான சதீஷ் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வலைவீசி வருகின்றனர். இச்சம்பவத்தால் தையூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.