சீனாவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்த வயது சிறுமி ஒருவர், தவறுதலாக 50 கிராம் எடையுள்ள சிறிய தங்கக் கட்டியை விழுங்கியதால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அதிரடி நடவடிக்கையால் அந்தத் தங்கக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டு, சிறுமி தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளார்.
சீனாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் ஐந்து வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே மேசையில் வைக்கப்பட்டிருந்த 4 சென்டிமீட்டர் நீளமும், 50 கிராம் எடையுமான சிறிய தங்கக் கட்டியை அவர் தவறுதலாக வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.
WARNING: Keep your gold stack away from young children
A 5 year old girl in China swallowed a 50g #Gold bar by accident
The 4 cm long bar was retrieved successfully by doctors in hospital pic.twitter.com/8onxAORdET— David Lee (@DavidLe76335983) August 19, 2026
சிறிது நேரத்திற்குப் பிறகு சிறுமி தனது பெற்றோரிடம் இதைக் கூற, அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அந்தத் தங்கக் கட்டியை அகற்றுவதற்கான பிரத்யேக மருத்துவக் கருவிகள் இல்லாததால், உடனடியாகப் பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே சோதனையில், சிறுமியின் வயிற்றில் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள தங்கக் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தங்கக் கட்டியானது கடினமாகவும், அடர்த்தியாகவும், வழுவழுப்பான மேற்பரப்புடனும் இருந்தது. அது சிறுமியின் வயிற்றின் உள்சவ்வைக் கீறி, கடுமையான உள் இரத்தப்போக்கையும், உறுப்புகளில் துளைகளையும் ஏற்படுத்தும் ஆபத்தான கட்டத்தில் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமானது.
அறுவை சிகிச்சை செய்வதற்கு மிகவும் குறுகலான இடமான சிறுமியின் இரைப்பைக் குழியில் அந்தத் தங்கக் கட்டி சிக்கியிருந்தது. இருப்பினும், திறமையான மருத்துவர் குழு துரிதமாகச் செயல்பட்டு, அறுவை சிகிச்சையின் போது எண்டோஸ்கோபி முறையைப் பயன்படுத்தி, ஒரு சுருக்குக் கயிற்றின் உதவியால் அந்தத் தங்கக் கட்டியை மிகக் கவனமாக வெளியே எடுத்தது.
சில நிமிடங்களில் முடிக்கப்பட்ட இந்த நுட்பமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிறுமியின் உடல்நிலை சீராகிவிட்டதுடன், அவர் தற்போது ஆபத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். “ஐந்து வயதுக் குழந்தை 50 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியை எடுக்கும் அளவுக்கு அந்தப் பொருள் எப்படி கையில் கிடைத்தது?” என்றும், “பெற்றோர் இது போன்ற ஆபத்தான மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைக் குழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என்றும் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
