மகாராஷ்டிராவில் மொபைல் போன் வாங்குவது தொடர்பாகப் பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறில், 19 வயது இளைஞர் மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதுடன், அவரைத் காப்பாற்ற முயன்ற அவரது தாய் மற்றும் தந்தையும் அடுத்தடுத்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் கண் கலங்க வைத்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தின் கடைசி நேரப் பரிதாப வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாநகர்  மாவட்டத்தில் உள்ள வாலுஜ் எம்.ஐ.டி.சி. பகுதிக்குட்பட்ட திசகான்  மலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இந்தச் சோகம் நடந்துள்ளது. 19 வயதான குனால் சந்த்குடே என்ற இளைஞர், தனக்கு ஒரு மொபைல் போன் வேண்டும் என்று தனது பெற்றோரிடம் பிடிவாதம் பிடித்து வந்துள்ளார். இது தொடர்பாக வீட்டில் பெற்றோருக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனம் உடைந்த அந்த இளைஞர், கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள மலையின் உச்சிக்குச் சென்றுள்ளார். மகனின் பின்னாடியே பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களும் பதறி அடித்து அங்கு விரைந்து சென்றனர்.

 

மலையின் விளிம்பில் நின்று கொண்டு குனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அவரது பெற்றோர் அவரைப் பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.

வெளியான அந்த வைரல் வீடியோவில், அங்கிருந்த ஒருவர், “உனக்கு ஐபோன் வேண்டுமானால் சொல்லு, நாங்கள் வாங்கித் தருகிறோம்” என்று கூறுவதும், மற்றொருவர் “அது ஐபோன் 15 ப்ரோ  என்று வாக்குவாதத்தைச் சமாதானப்படுத்த முயல்வதும் பதிவாகியுள்ளது. ஆனால், எதைக் கேட்பதாயும் இல்லை என்ற உறுதியுடன் இருந்த குனால், “தற்கொலை செய்வதுதான் ஒரே வழி, இதற்கு வேறு வழியே இல்லை” என்று அடம் பிடித்துள்ளார். கதறி அழுத அவரது தாயும், மற்றவர்களும் எவ்வளவோ முயன்றும் அவரை மாற்ற முடியவில்லை.

தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினரும் காவல்துறையினரும் விரைந்து வந்து மலையின் அடிவாரத்தில் பாதுகாப்பு வலைகளை  விரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், குனால் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார்.

சில நிமிடங்களில் எதிர்பாராதவிதமாக குனால் மலையிலிருந்து குதித்தார். மகனைக் காப்பாற்றும் பதைபதைப்பில் அவரது தந்தையும் அவரைப் பின்தொடர்ந்து கீழே குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். கண் முன்னே கணவனும் மகனும் அடுத்தடுத்து விழுவதைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்ற தாயும், அதே மலையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மொபைல் போனுக்காக அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.