கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஓடும் லாரியில் இருந்து எதிர்பாராதவிதமாக நழுவி விழுந்த இரும்புக்குழாய் ஒன்று, பின்னால் பைக்கில் வந்த இளைஞரின் உடல் மீது பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டம் குட்டநெல்லூர் பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே இரும்பு கம்பிகள் மற்றும் குழாய்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியைத் தொடர்ந்து ஒரு இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் மிக அருகில் பின்னால் வந்து கொண்டிருந்தார்.
மாலின் அருகே வந்தபோது லாரி டிரைவர் திடீரெனத் தடுத்துப் பிரேக் போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் லாரியின் பின் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த இரும்புக்குழாய்கள் நிலைகுலைந்து முன்னும் பின்னுமாக அசைந்தன. திடீரென ஏற்பட்ட இந்த அசைவால், சில இரும்புக்குழாய்கள் லாரியிலிருந்து நழுவிச் சாலையில் கொட்டின. அப்போது லாரியைப் பின் தொடர்ந்து பைக்கில் வந்துகொண்டிருந்த இளம் இளைஞர் மீது அந்த இரும்புக்குழாய்களில் ஒன்று எதிர்பாராதவிதமாக வேகமாக வந்து பாய்ந்தது.
CCTV footage of the accident in #Thrissur where a bike rider died after the cable fell from the minilorry. pic.twitter.com/iCCNwIjryV
— Akshay (@This_Is_AkHi) August 21, 2026
இந்த எதிர்பாராத கோரத் தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இளைஞரைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களும் பிற வாகன ஓட்டிகளும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், நெடுஞ்சாலைப் பகுதியில் நீண்ட நேரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். லாரியிலிருந்து இரும்புக்குழாய்கள் எவ்வாறு நழுவி விழுந்தன என்பது குறித்தும், ஓட்டுநரின் அஜாக்கிரதை உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தீவிர விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
