உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபநகர் மாவட்டத்தில் உள்ள மோர்பா பகுதியில், மூர்க்கத்தனமாகத் தெருநாய் ஒன்றை நபர் ஒருவர் தடியால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபநகர் மாவட்டம் மோர்பா நகரில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி இரவு 8 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே ஒரு நபர் நாய் ஒன்றைத் தடியால் மாறி மாறித் திரும்பத் திரும்பத் தாக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் அந்த விலங்கு பலத்த காயங்களுடன் அவதிப்படும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபர், ரகுநந்தனின் மகன் கார்த்திக் என்று அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

இந்தக் கோரச் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். பேச முடியாத வாயில்லா ஜீவன்கள் மீது இது போன்ற கொடூரத் தாக்குதல்கள் நடத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவப் பகுதியில் இதுபோன்ற கொடூரச் செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்திச் சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா மற்றும் காவல்துறையினர் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன.