லக்னோவில் செயல்படும் City Montessori School (CMS) எனும் பிரபல தனியார் பள்ளி, சாதாரண வகுப்பறை கல்வியை தாண்டி மாணவர்களுக்கு சர்வதேச அனுபவங்களை வழங்கி வரும் விதம் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஜப்பானில் சுற்றித்திரியும் CMS பள்ளி மாணவர்கள், இந்தியாவை சேர்ந்த ஒரு வாலிபரிடம் உரையாடுவதும், தாங்கள் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் என்றும், ஜப்பான் பயணத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதேபோல், அவர்கள் எதிர்காலத்தில் ஜெர்மனி மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் பள்ளி பயணத்தை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினர்.
View this post on Instagram
இந்த 10 நாள் ஜப்பான் சுற்றுலா பயணத்தின் செலவு ஒரு மாணவருக்கு ரூ.3.5 லட்சம் என தெரிவித்துள்ளனர். இப்பயணத்தில் மொத்தமாக 64 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். உயர்நிலை வகுப்பைச் சேர்ந்த ஜான்சன் என்ற மாணவர் கூட சேர்ந்து, பணம் செலுத்த முடிந்த மாணவர்கள் யாவரும் இந்த பயணத்தில் கலந்து கொண்டதாக உறுதிப்படுத்துகிறார்.
அந்த வீடியோ எடுப்பவர் கூறும் போது, “நம் காலத்தில் பள்ளி இந்தியா கேட் வரைதான் அழைத்துச் செல்வார்கள். இப்போது குழந்தைகள் வெளிநாட்டில் உலக அனுபவம் பெறுகிறார்கள். இது நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என தனது பார்வையைப் பகிர்ந்துகொள்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. “லக்னோ பள்ளி 3.5 லட்சம் செலவில் ஜப்பான் சுற்றுலா எடுத்துச் சென்றது” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்தையும், பழைய நினைவுகளையும் பகிர்ந்துள்ளனர்.
ஒரு பயனர், “எங்களை இந்தியா கேட்டுக்கூட அழைக்கலை” என நகைச்சுவையுடன் கூற, மற்றொருவர் “இத்தனைப் பணத்துல என் LKG முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை முடிஞ்சிருக்கும்” என பதிவிட்டுள்ளார். CMS பற்றியும், அதன் மிகப்பெரிய கல்வி அமைப்பாக இருக்கிற தன்மையையும் சிலர் நினைவுபடுத்தியுள்ளனர். “பணம் இருந்தா எல்லாமே சாத்தியம்” என ஒருவரின் கருத்தும் பிரபலமடைந்துள்ளது.
