மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் தக்லி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியராக தாமு பீம்ராவ் ரோஜேகர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தலைமை ஆசிரியரான தாமு நேற்று வகுப்பறையில் குடித்துவிட்டு போதையில் மயங்கி கிடந்தார். அதனால் மாணவர்கள் அனைவரும் வகுப்பறையில் அமராமல் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலிராம் கவந்தேவால் தேவால் என்பவர் பள்ளிக்கு வந்தார். அங்கு வகுப்பறையில் மயங்கி கிடந்த தலைமை ஆசிரியரை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரை ரத்த பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.