கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கும்டா தாலுகா ராமதீர்த்த மலைப்பகுதியில் உள்ள ஆழமான காட்டுப் பகுதியில், கடும் அபாயம் நிறைந்த ஒரு குகையில் கடந்த 2 மாதங்களாக இரு குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யா நாட்டை சேர்ந்த 40 வயதான நினா குடினா, alias மோஹி என்பவர் சமீபத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடம்பமாக மரங்களால் சூழப்பட்ட பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த கோகர்ணா போலீசாருக்கே இந்த விசித்திர குகைவாசம் கண்ணில் பட்டது. குகையின் வாயிலில் பிளாஸ்டிக் ஷீட் வைக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளே சென்று பார்த்த போது ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அருகில் நினா, மற்றொரு குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் SR தலைமையிலான போலீசார் மூவரையும் மீட்டனர்.

கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவுக்கு வணிக வீசாவில் வந்த நினா, தொடக்கத்தில் கோவாவில் தங்கினார். பின்னர் காக்கர்னா பகுதியின் ஆன்மிக சூழலில் ஈர்க்கப்பட்டு, ஹிந்துத் தத்துவங்களில் ஆழமான பக்தி கொண்டார். கடந்த 2017ம் ஆண்டில் அவருடைய விசா காலாவதியானபோதும், இந்தியாவிலேயே காட்டுக்குள் வாழ்ந்தால் குடிவரவு அதிகாரிகள் பிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டை வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்தார்.

கடந்த 2018ம் ஆண்டு வெளியேற கூடுமான அனுமதி பெற்ற பின்னரும், சில மாதங்கள் நேபாளத்தில் இருந்து மீண்டும் திரும்பி, உத்தர கன்னட மாவட்ட காடுகளில் குழந்தைகளுடன் முழுமையான தனிமையில் வாழ்ந்து வந்தார்.

நினா குடினா தங்கியிருந்த குகையில் போலீசார் சிவன் சிலை, ரஷ்ய மொழி புத்தகங்கள் மற்றும் இந்திய தேவதைகளின் படங்களை கண்டுபிடித்தனர். மேலும், இரு மகள்களும் இந்தியாவில் பிறந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் பிள்ளைகளின் தந்தையைப் பற்றிய கேள்விக்கு நினா பதிலளிக்க மறுத்துள்ளார். குழந்தைகளை காட்டிலேயே பெற்றெடுத்தாரா? மருத்துவ உதவிகள் எதுவும் பெற்றாரா? என்பதைப்பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் “இந்த இடம் பாம்புகள், நிலச்சரிவுகள் என மிக ஆபத்தானது, வெளியே வாருங்கள்” எனக் கேட்டபோது, நினா முதலில் மறுத்துவிட்டார். “நாங்கள் பாம்புகளுக்கு தீங்கு செய்யவில்லை, அதனால் அவையும் எங்களை பாதிக்கவில்லை. நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போதும் பாம்புகள் சுற்றி வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவை எதுவும் செய்யவில்லை” என பதிலளித்தார். ஆனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதைக் கூறியபின் தான், அவர் வெளியே வர ஒத்துக்கொண்டார்.

மழைக்காலம் என்றாலும், பிள்ளைகளுடன் குறைந்த வசதிகளுடன் வாழ்ந்த நினா, முன்கூட்டியே தேவையான உணவுப் பொருட்கள் சேமித்து வைத்திருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். அவ்வப்போது அருகிலுள்ள நகரத்திற்கு சென்று சாமான்கள் வாங்கி, மொபைல் சார்ஜ் செய்து மீண்டும் குகைக்குத் திரும்புவாராம்.

மீட்பு செய்யப்பட்ட பின் குழந்தைகள் இருவரும் ஆசிரமத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டபோது, விளக்குகள், படுக்கை மற்றும் நவீன வசதிகளை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுபோல வாழ்க்கையை அவர்கள் இதுவரை கண்டதில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது நிநா குடினா மற்றும் குழந்தைகள் கர்வார் மகளிர் நல மையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் விசா காலாவதியாகியதால், தற்போது நாடுகடத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.