உலக அளவில் ‘தூங்கா நகரம்’ என்று  பெயர் பெற்ற இடமாக சென்னை மாறியுள்ளது. அதாவது  ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, வெப்பம் சார்ந்த தீவிர மாற்றங்களால் மக்கள் தங்களது நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும், அதில் குறிப்பாகத் தமிழகமும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென்னிந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 78 முதல் 91 மணிநேரம் வரை அதிக வெப்பம் நிறைந்த இரவுகளால் மக்கள் தூக்கமின்றித் தவித்து வருகின்றனர்.

இந்த ஆய்வின்படி, இந்தியாவின் பெரிய மெட்ரோ நகரங்களில் அதிக வெப்பம் கொண்ட இரவுகளால் ஆண்டுக்கு சுமார் 93 மணிநேரம் வரை தூக்கத்தை இழந்து, இந்தியாவின் அதிகாரப்பூர்வ ‘தூக்கமற்ற தலைநகராக’ சென்னை மாறியுள்ளது. இதன் மூலம் மற்ற பெருநகரங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சென்னை இந்த மோசமான பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதர முக்கிய நகரங்களின் வரிசையில், மும்பை மக்கள் ஆண்டுக்கு 84 மணிநேரமும், கொல்கத்தா மக்கள் 80 மணிநேரமும் தூக்கத்தை இழக்கின்றனர். நாட்டின் தலைநகரான டெல்லி 66 மணிநேரத்துடன் இந்தப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய மாநிலங்களின் நிலையைப் பார்க்கும்போது, தமிழகத்திற்கு அடுத்தபடியாகப் புதுச்சேரியில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு நபர் 92 மணிநேரம் தூக்கம் இழந்து தவிக்கிறார். தொடர்ந்து ஆந்திர பிரதேசம் 88.6 மணிநேரமும், கேரளம் 88.3 மணிநேரமும் கடுமையான வெப்ப இரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான வெப்பம் மற்றும் காற்றில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை மனிதர்களின் உடல் வெப்பநிலையைக் சீராக வைத்துக் கொள்ள விடாமல் தடுத்து, அவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுப்பதாக இந்த ஆய்வு அறிவியல் பூர்வமாக விளக்குகிறது.

இந்தக் கடுமையான வெப்பத் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுவோர் முதியவர்கள், பெண்கள், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் வீடுகளில் குளிர்ச்சியான சூழலுக்கான (ஏசி போன்ற) வசதிகள் இல்லாத சாதாரண மக்கள்தாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காணப்படும் நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகள்தான் இந்த இரவு நேர வெப்ப அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன. இயற்கையின் இந்த அதீத மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் உடல்நலமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.