குஜராத் மாநிலம் அனந்த் மற்றும் வடோதரா மாவட்டங்களை இணைக்கும் 40 ஆண்டு பழமையான முஜ்பூர்-கம்பீரா பாலம், கடந்த ஜூலை 9-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இந்த இடத்திற்கு GPS வழியாக வரும் வாகனங்கள் தற்செயலாக இடிந்த பாலத்தில் நுழையக்கூடும் என்பதால், பத்ரா பகுதியில் பாலம் நோக்கிச் செல்லும் பாதையில் அதிகாரிகள் சுமார் மூன்று அடி உயரம் கொண்ட செங்கல் சுவரை கடந்த ஞாயிறன்று அவசரமாக கட்டினர்.
ஆனால், அந்த சுவருக்கு மறுபக்கம் மீட்பு பணிக்காக வந்த இரண்டு வாகனங்களும், ஒரு மாஸ்ட் லைட்டும் சிக்கிக் கொண்டன. அதிகாரிகள் அவசரத்தில் இந்த வாகனங்கள் உள்ளே இருக்கின்றன என்பதையும் கவனிக்கவில்லை என்பது தான் உண்மை.
உள்ளூர் கிராம மக்கள் அந்த நேரத்தில் அதிகாரிகளை எச்சரித்தும், அவர்கள் சொல்வதை யாரும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளனர். சுவர் கட்டப்பட்ட பிறகு தான் அந்த தவறு புலப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது மீட்பு வாகனங்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து வருகிறது. அதிகாரிகள் சுவரை அகற்றி வாகனங்களை வெளியேற்றிய பிறகு, அதே இடத்தில் மீண்டும் சுவர் கட்டப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இந்த தவறு குறித்து ஒரு கிராம மக்கள் ஒருவர் கூறுகையில், “ஒரு பெரிய விபத்துக்குப் பிறகும், நம்ம நிர்வாகத்தின் அலட்சியம் இப்படித்தான் தொடருகிறது…” என வேதனையுடன் தெரிவித்தார். தற்போது மற்றொரு பக்கம் பாலத்தின் எதிர் ஓரத்திலும் இதேபோல் சுவர் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
