“பாஜக யாரோடும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் எங்களிடம் வரவில்லை” என பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா, “பாஜக தரப்பில் தவெக-விற்கு 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி தருவதாக டெல்லி மேலிடம் ஆஃபர் கொடுத்தது” எனப் பேசி அரசியல் வட்டாரத்தில் பெரும் புகையைக் கிளப்பியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது” என நயினார் நாகேந்திரன் ஒற்றை வரியில் பதிலடி கொடுத்து விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
மேலும், ‘ஜன நாயகன்’ திரைப்பட விவகாரத்திற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். கூட்டணி விவகாரத்தில் டெல்லி மேலிடம் தவெக-வுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயினாரின் இந்தத் தெளிவான விளக்கம் பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன.
