”அரசியல் களத்தில் சூப்பர் ஸ்டாரைப் பற்றிப் பேசினால் சும்மா விடமாட்டோம்” என மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “திமுக மிரட்டலால் தான் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கினார்” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதவ் அர்ஜுனா தவெக-வோடு நெருக்கமாகப் பயணிக்கும் சூழலில், ரஜினி குறித்து அவர் பேசிய இழிவான கருத்துக்கு விஜய் இதுவரை கண்டனமோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பது ரஜினி ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
இதுகுறித்து ஆவேசமாகப் பேசியுள்ள மதுரை ரஜினி ரசிகர்கள், “எங்கள் தலைவரைப் பற்றி அவதூறு பேசியதற்கு விஜய் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் எப்போது மதுரை மேலூருக்கு வந்தாலும், அவருக்குக் கருப்புக் கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம்” என அதிரடியாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ரஜினி ரசிகர்களின் இந்தத் திடீர் போர்க்கொடி விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
