உத்திரப்பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டம்  சனுவா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதுடைய தஞ்சிம். எலக்ட்ரீஷியனாக வேலை பார்க்கும் பாபு கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்புதான் தஞ்சிம் மற்றொரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்தார். இந்த சூழலில், தம்பதியினரின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரதட்சணை கொடுமையும் பெண்பிள்ளைகள் தொடர்ந்து பிறப்பதும் அந்த குடும்பத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

திருமணம் முடிந்த சில காலங்களிலேயே தஞ்சிமின் கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு நச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். நாளுக்கு நாள் இந்த கொடுமை எல்லை மீறிச் சென்றிருக்கிறது. குறிப்பாக, நான்காவது முறையாகவும் பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கணவன் மற்றும் அவனது குடும்பத்தினரின் வன்கொடுமை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. “உன் குடும்பத்திடம் போய் வரதட்சணைப் பணம் கொண்டு வா” என்று கூறி தஞ்சிமைத் தொடர்ந்து மிரட்டி வந்ததோடு, தினமும் அவரைத் தாக்கித் துன்புறுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், வழக்கம் போல வரதட்சணை கேட்டு ஏற்பட்ட தகராறு கொடூரமான வடிவத்தை எடுத்துள்ளது. தஞ்சிமின் கணவர் பாபு கான் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்று, கட்டக்கட்டையால் தாக்கியதோடு மிருகத்தனமாக அவரைத் தாக்கியுள்ளார். இதில் ஒரு கட்டத்தில் தஞ்சிமின் பிறப்புறுப்பில் கடுமையாக உதைக்கப்படவே, அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியால் அலறித் துடித்துள்ளார். ஆனாலும் இரக்கம் சிறிதும் இல்லாத கணவனும் குடும்பத்தினரும் அவரை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லாமல், மூன்று முறை தலாக் கூறி வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். அத்துடன்  பச்சைக் குழந்தையையும் பறித்து கொண்டனர்.

வலியில் கதறித் துடித்த அந்த இளம் தாயின் நிலையை அறிந்த அவரது பெற்றோர், உடனடியாக  அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையும் மருத்துவக் கண்காணிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ அறிக்கையின் முடிவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.