தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தரப்பில் கேட்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதிமுக ஒதுக்க முன்வந்துள்ள இடங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜகவுக்கு 29 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளதாகவும், ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படாததால் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் தமிழகப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​இந்தச் சூழலில், கூட்டணியைச் சரிசெய்யவும், மேலிடத் தலைவர்களுடன் நேரடியாகப் பேசி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். பியூஷ் கோயலின் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஸின் இந்த டெல்லி விசிட் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமித் ஷா உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்தித்து, இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டணிக் கணக்குகள் எப்படி அமையப்போகிறது என்பதைப் பொறுத்தே தமிழக தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக அமையும் என்பது முடிவாகும்.