தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தையே உலுக்கிய பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், 9 நாட்களாக நீடித்த மர்மம் விலகியுள்ளது. குற்றவாளியைக் கைது செய்யாமல் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கண்ணீருடன் வீதியில் இறங்கிப் போராடிய நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்பவரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகத் தூக்கியுள்ளனர். செல்போன் சிக்னலை வைத்து மோப்பம் பிடித்த போலீசார், அறிவியல்பூர்வமான ஆதாரங்களால் குற்றவாளியைச் சல்லடை போட்டுப் பிடித்துள்ளனர்.

​இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட தர்ம முனீஸ்வரனை மரணத்தின் விளிம்பிலும் காட்டி கொடுத்துள்ளார் அந்த மாணவி. உயிரிழப்பதற்கு முன் அவர் நடத்திய போராட்டத்தின் போது, அவரது விரல் நகங்களுக்குள் சிக்கிய கொலையாளியின் தசைத் துண்டுதான் இன்று முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. அந்தச் சதையின் டிஎன்ஏ (DNA) மாதிரியும், பிடிபட்ட முனீஸ்வரனின் டிஎன்ஏ-வும் கச்சிதமாக ஒத்துப்போயுள்ளது. ஒன்பது நாட்களாக நீடித்த மக்களின் போராட்டம் மற்றும் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு இன்று ஒரு முக்கிய விடை கிடைத்துள்ளது.