“நாம் தமிழர் கட்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால், தமிழ்நாட்டின் தற்போதைய அரசு முத்திரை மாற்றப்பட்டு, அதில் புரட்சிகரமான மாற்றம் செய்யப்படும்” என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போதைய முத்திரையில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்திற்குப் பதிலாக, உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரின் உருவம் அரசு முத்திரையாக இடம்பெறும் என்பதே அந்த முக்கிய அறிவிப்பு. இது வெறும் வாய்மொழி அறிவிப்பாக இல்லாமல், கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே அதிகாரப்பூர்வமாக அந்தப் புதிய முத்திரை அச்சிடப்பட்டு வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​தமிழ் அடையாள மீட்பு மற்றும் மொழிவழித் தேசிய அரசியலை முன்னிறுத்தி வரும் சீமான், இந்த மாற்றத்தின் மூலம் தமிழக அரசின் அடையாளத்தையே மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளார். “கோவில்கள் ஆன்மிக அடையாளம், ஆனால் வள்ளுவர் தமிழினத்தின் அற அடையாளம்” என்கிற கருத்தியலை முன்வைத்து இந்தத் தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் இந்த முத்திரை மாற்றம் குறித்த செய்தி, சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலத்த அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.