கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீயன்னூர் குட்டக்குழி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபாலனின் மகனும், தி.மு.க. இளைஞரணியின் திருவட்டார் ஒன்றிய துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தவருமான அருண்பால் (39) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ஜினீயரிங் பட்டதாரியான அருண்பால், அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பனின் தங்கை மகனாகவும் அவர் அறியப்பட்டவர். கடந்த 2014-ஆம் ஆண்டு அருண்பாலுக்கும், அருமனை பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகள் ஷைபாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
திருமணத்திற்குப் பின்னர் ஏற்பட்ட குடும்ப முரண்பாடுகளால், 2017-ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதுதொடர்பான விவாகரத்து வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வக்கீல் தகவல் அளித்தபோது, அருண்பால் வரமாட்டேன் என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்மீது தொடரப்பட்ட சில வழக்குகளால் தொழில் பாதிக்கப்பட்டதுடன், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகி வந்ததாகவும், இதனால் கடந்த சில மாதங்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உணவு முடித்து தனது அறைக்கு சென்ற அருண்பால், அன்றிரவு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் டீ கொடுக்க சென்ற அவரது தாயார் பேபி, மகனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதும் அலறினார். உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இதுகுறித்து ஜெயபாலன் அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அருண்பாலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் விவாகரத்து வழக்கு விசாரணை நெருங்கியிருந்த சூழலில், அரசியல் பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவட்டார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
