உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ள பிரிட்டன் அரசியலில், தேர்தல் ஏதும் நடக்காமலேயே அந்நாட்டின் புதிய பிரதமராக லேபர் பார்ட்டியின் முக்கியத் தலைவரான ஆண்டி பர்ன்ஹாம் திங்கட்கிழமை முறைப்படி பொறுப்பேற்க உள்ளார். கடந்த மாதம் லேபர் பார்ட்டிக்குள்ளேயே எழுந்த கடுமையான அரசியல் நெருக்கடி மற்றும் எதிர்ப்புகள் காரணமாக, தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கட்சியின் சிறப்பு மாநாட்டில், மொத்தம் உள்ள 401 லேபர் பார்ட்டி எம்பிக்களில் 349 பேரின் பிரம்மாண்ட ஆதரவைப் பெற்று ஆண்டி பர்ன்ஹாம் புதிய தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நாடாளுமன்றத்தில் லேபர் பார்ட்டியே பெரும்பான்மை வகிப்பதால், கட்சியின் புதிய தலைவரான பர்ன்ஹாம் தானாகவே நாட்டின் அடுத்த பிரதமராகிறார். திங்கட்கிழமை பக்கிங்காம் அரண்மனையில் அரசர் சார்லஸ் III-ஐ நேரில் சந்தித்து முறைப்படி அரசாங்கத்தை அமைத்த பிறகே அவர் அதிகாரப் பொறுப்பை ஏற்பார், அதுவரை கீர் ஸ்டார்மர் தற்காலிக பிரதமராக நீடிப்பார்.

பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல் எதுவும் நடத்தப்படாமல் எப்படி ஒரு புதிய பிரதமர் வர முடியும் என்ற கேள்வி உலகளவில் எழுந்துள்ளது. பிரிட்டனின் நாடாளுமன்ற ஆட்சி முறையின்படி, ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும் பட்சத்தில், பொதுத்தேர்தல் நடத்தாமலேயே தனது கட்சியின் தலைவரை மாற்றிக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி உண்டு. கடந்த 2024-ஆம் ஆண்டுதான் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது, அடுத்த தேர்தல் 2029-ல் தான் வரவுள்ளது. எனவே, ஆளும் கட்சி தனது தலைவரை மாற்றுவதற்காக மக்கள் மீண்டும் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டிய அரசியலமைப்பு கட்டாயம் அங்கு இல்லை.

பிரதமர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கூட முழுமையடையாத நிலையில் கீர் ஸ்டார்மர் ஏன் ராஜினாமா செய்தார் என்ற பின்னணியும் தற்சமயம் வெளியாகியுள்ளது. அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு அரசியல் சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக, பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்று மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரை அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதராக நியமித்த ஸ்டார்மரின் முடிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், கடந்த மே மாதம் நடைபெற்ற பிரிட்டன் உள்ளாட்சித் தேர்தலில் லேபர் பார்ட்டி சந்தித்த மிக மோசமான தோல்விகள், சொந்தக் கட்சி எம்பிக்களையே அவருக்கு எதிராகத் திருப்பியது.

இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் அவர் விலகினார், அவருக்குப் பின் போட்டியின்றி ஒருமனதாக ஆண்ட்டி பர்ன்ஹாம்தேர்வு செய்யப்பட்டார். திங்கட்கிழமை பக்கிங்காம் அரண்மனையில் பாரம்பரிய ‘கிஸ்ஸிங் ஆஃப் ஹேண்ட்ஸ்’ சடங்கு முடிந்தது, பிரிட்டனின் 59-வது பிரதமராக 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்திற்குள் ஆண்டி பர்ன்ஹாம் நுழைவார். கடந்த பத்து ஆண்டுகளில் பிரிட்டனின் பிரதமராகப் பொறுப்பேற்கும் ஏழாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.