பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேரடியாக அமர்ந்து பார்ப்பது என்பது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் வாழ்நாள் கனவாகும். ஆனால், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க இறுதிப் போட்டியைக் காணச் செல்லும் ரசிகர்களுக்கு, மேட்ச் டிக்கெட் விலையையும் தாண்டி மைதானத்திற்குள் விற்கப்படும் அத்தியாவசிய உணவு மற்றும் குளிர்பானங்களின் விலைப் பட்டியல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தி அத்தலெடிக்’ நிறுவனம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையின்படி, மைதானத்திற்குள் விற்கப்படும் சாதாரண ஹாட் டாக் முதல் பீர், காக்டெய்ல் வரையிலான அனைத்துப் பொருட்களுக்கும் வழக்கத்திற்கு மாறான பிரீமியம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி முடிவடைந்ததும் நடைபெறும் உலகக்கோப்பை பரிசளிப்பு விழா, நீட்டிக்கப்பட்ட இடைவேளைக் கொண்டாட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் காரணமாக ரசிகர்கள் பல மணி நேரம் மைதானத்திற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்கள் அங்குள்ள உணவுகளை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் நிலவுகிறது.

அங்கு முழு உணவுடன் கூடிய ஒரு காம்போ பேக் வாங்க வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ₹1,829 (19 டாலர்) செலவிட வேண்டும். சாதாரண ஒரு பாட்டில் குடிநீர் ₹481 (5 டாலர்) என்றும், கோகோகோலா, ஸ்ப்ரைட் போன்ற குளிர்பானங்கள் ₹577 (6 டாலர்) என்றும் விற்கப்படுகின்றன. மேலும், அசைவ உணவுகளான டெலி சாண்ட்விச் ₹1,540 மற்றும் சீஸ் பீட்சா ₹1,059 என்ற உச்சக்கட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மதுப்பிரியர்களுக்கு இந்தச் செலவு இன்னும் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஒரு கேன் பீர் வாங்க வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ₹1,540 முதல் ₹1,636 வரையிலும், காக்டெய்ல் பானங்களுக்கு ₹1,829 வரையிலும் ரசிகர்கள் செலவழிக்க வேண்டும். இதன்படி கணக்கிட்டால், ஒரு ரசிகர் ஒருமுறை சிற்றுண்டி இடைவேளையின் போது ஒரு ஹாட் டாக், பிரஞ்சு பிரைஸ் மற்றும் ஒரு பீர் ஆகியவற்றை வாங்கினால் மட்டுமே அவரது பாக்கெட்டிலிருந்து ₹3,128உடனடியாகக் கரைந்துவிடும்.

இருப்பினும், உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் இதர 16 மைதானங்களின் விலைப் பட்டியலோடு ஒப்பிடும்போது, மெட்லைஃப் மைதானத்தின் குடிநீர் மற்றும் குளிர்பானங்களின் விலை ஓரளவுக்குக் குறைவுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிஃபா நிர்வாகம் அனைத்து மைதானங்களுக்கும் பொதுவான விலை அமைப்பைக் கொண்டு வராமல், அந்தந்த மைதானங்களில் ஏற்கனவே இருக்கும் உள்ளூர் உணவக ஒப்பந்தக்காரர்களையே பயன்படுத்த அனுமதித்துள்ளதே இந்த விநோத விலை வேறுபாட்டிற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.