தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கனகராஜும் (43), அதே பள்ளியின் கணித ஆசிரியை ஹேமாவும் (36) நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

இருவரும் தங்களது அந்தரங்கப் புகைப்படங்களைச் செல்போனில் பகிர்ந்து கொண்டதை அறிந்த அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களாக இருந்த பி.எட் மாணவர்கள் இருவர், கனகராஜின் செல்போனைத் திருடிவிட்டனர்.

அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, ஆசிரியரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுப் பேரம் பேசியுள்ளனர்.

செல்போன் காணாமல் போனது குறித்து ஆசிரியர் கனகராஜ் அளித்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பயிற்சி ஆசிரியர்களான இனியவர்மன் மற்றும் கலைசாரதி பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்த செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், பிளாக்மெயில் செய்ததற்காக இருவரையும் கைது செய்தனர். அதே நேரத்தில், அரசுப் பள்ளியில் பணியாற்றிவிட்டு ஒழுக்கக் கேடாக நடந்துகொண்ட உதவித் தலைமை ஆசிரியர் கனகராஜ் மற்றும் ஆசிரியை ஹேமா ஆகிய இருவரையும் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்து உத்தரவிட்டுள்ளனர்.