திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எண்ணெய் நிறுவன ஊழியரிடம், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.35.55 லட்சம் மோசடி செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

வடக்கன்குளம் அமிர்தம்நகரைச் சேர்ந்த ஜெய செந்தில்குமார் (52), அமெரிக்காவில் 27 ஆண்டுகள் கச்சா எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் அறிமுகமான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ்சிங் என்பவர், தனது நிறுவனத்தின் மூலம் 25 இளைஞர்களுக்கு ‘மெக்கானிக் ராஸ்டாபோட்’ வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி ஜெய செந்தில்குமார் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.35.55 லட்சம் பணத்தைச் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட உமேஷ்சிங், இந்தோனேஷியா செல்வதற்கான போலி விசா மற்றும் விமான டிக்கெட்டுகளை வழங்கி ஏமாற்றியது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெய செந்தில்குமார் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், ஆய்வாளர் அன்னலெட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் ஆஷா ஜெபகர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஹரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்று, அங்கு தலைமறைவாக இருந்த உமேஷ்சிங்கை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை திருநெல்வேலிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிமாநிலத்திற்குச் சென்று துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.