கோயம்புத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், 70 வயது முதியவரை அவரது மகன் தோளில் சாய்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 5,000 வெளி நோயாளிகளும், 2,000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில், நோயாளிகளை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில்  70 வயது முதியவருக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்ட நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்த மகன், வாகன நிறுத்துமிடம் வரை நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலி கேட்டார். ஆனால், ஊழியர்கள் காத்திருக்கச் சொன்ன போதிலும், 1 மணி நேரத்திற்கு மேலாகியும் சக்கர நாற்காலி கொடுக்கபடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையை தோளில் சாய்த்து மேல் தளத்திலிருந்து கீழே இறக்கி, பின்னர் இழுத்தபடி மருத்துவமனை வாசலில் நின்ற வாகனத்திற்கு கொண்டு சென்றார். இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், இந்த சம்பவம் வைரலாக பரவியது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் விசாரணை நடத்தியதில், ஊழியர்கள் எஸ்தர்ராணி மற்றும் மணிவாசகம் ஆகியோரின் அலட்சியம் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மருத்துவமனையின் சேவை குறைபாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.