கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில், குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று  காலை, அணையின் சிறிய மதகு பகுதியின் அருகில் இருந்து நான்கு பேர் திடீரென நீரில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். தற்கொலைக்கு முயன்றவர்கள், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் வசித்து வரும் சாரதாம்மாள் (வயது 75), அவரது மருமகன் லட்சுமணமூர்த்தி (50), மகள் ஜோதி (45) மற்றும் பேத்தி தீபிகா (20) எனத் தெரிய வந்தது.

குடும்பத்தில் ஏற்பட்ட உ பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முயற்சியில், சாரதாம்மாள் மற்றும் லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அருகிலிருந்த மீனவர்கள் விரைந்து சென்று ஜோதி மற்றும் தீபிகாவை மீட்டனர். உடனடியாக அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து விரைந்த கிருஷ்ணகிரி டேம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்திவருகிறார்கள்.