தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில், தோசை வாங்க சென்ற ஒருவர், சமையல் தொழிலாளியுடன் ஏற்பட்ட மோதலால், உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தனகுமார் (28), பிரதான சாலையில் பழக்கடை நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி பாண்டிதேவி என்ற மனைவியும், 5 வயது மகளும் உள்ளனர். மேலும், அவரது மனைவி தற்போது 6 மாத கர்ப்பிணி ஆவார். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இரவு, சந்தனகுமார் தோசை வாங்க அருகிலுள்ள ஓட்டலுக்குச் சென்றார். அந்த ஓட்டலில், அவரின் தெருவைச் சேர்ந்த சிவா (25) சமையல் பணியில் இருந்தார். அவர் அப்போது கல்லில் கொத்து பரோட்டா தயாரித்து கொண்டிருந்தார்.
பரோட்டாவை சிறுக சிறுக வெட்டும் செயலின் காரணமாக ஏற்பட்ட அதிக சத்தம் குறித்து சந்தனகுமார், “ஏன் இவ்வளவு சத்தம்?” எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், சந்தனகுமார் அங்கிருந்த விறகு கட்டையால் சிவாவின் தலையில் தாக்கினார். தலையில் ஏற்பட்ட காயத்தால் வலியடைந்த சிவா, தன் கைப்பிடியில் இருந்த கத்தியை எடுத்து, சந்தனகுமாரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின்னர் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், மருத்துவர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இதேவேளை, விறகு தாக்குதலால் காயமடைந்த சிவா, தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தனகுமார் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
