மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா நகரின் நாகேவாடி பகுதியில், இளம்பெண் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த தகராறு கொலை சம்பவமாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் நிகில் பவார் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது உறவினரான சந்தோஷ் லாண்டே என்பவர் இதுதொடர்பாக ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் வன்முறையாக மாறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் நிகில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்த தகவல் வெளியானதும் நாகேவாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சந்தன்ஜிரா போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
இதுதொடர்பாக சந்தோஷ் லாண்டேவை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார், அங்கு நடந்த சம்பவம் தொடர்பான தடயங்கள் மற்றும் சாட்சிகளின் தகவல்களை சேகரித்தனர். தகராறு எவ்வாறு தொடங்கியது, எந்தச் சூழலில் வன்முறை ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், இளம்பெண் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த பிரச்னையே தகராறுக்குக் காரணமாக இருந்தது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின்போது அங்கிருந்தவர்களிடமும், உயிரிழந்த நிகில் பவாரின் குடும்பத்தினரிடமும் போலீஸார் தகவல்களை சேகரித்து வருகின்றனர். ஒரு வார்த்தையால் தொடங்கிய தகராறு இளைஞரின் உயிரிழப்பில் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
