பெற்ற தாயின் கருவறை உலகிற்கு வெளிச்சம் தரும் மறு உருவம் என்பார்கள். ஆனால், அதே தாயின் கைகளாலேயே பெற்ற மகனின் உயிர் பிரிக்கப்பட்ட ஒரு கோரச் சம்பவம் மதுரை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. போதைக்கு அடிமையாகி, தன் கைகளாலேயே பெற்ற தாயைத் துன்புறுத்திய மகனை, ஆத்திரத்தின் உச்சகட்டத்தில் தாயே அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்மாள். இவருடைய மகன் ராஜா (32). இவருக்குத் தீவிர மது மற்றும் போதைப்பொருள் பழக்கம் இருந்து வந்துள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் ராஜா செய்யும் அநாகரிகச் செயல்களால் அவரது மனைவியும் குழந்தைகளும் ஏற்கனவே அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். மேலும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்துள்ளன. குடும்பத்தினரைக் கைவிட்ட போதிலும், பெற்ற தாயான ஐயம்மாளுக்குத் தொடர்ந்து சித்திரவதை தந்து வந்துள்ளார் ராஜா.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, வழக்கம்போலக் கடுமையான போதையில் வீட்டிற்கு வந்த ராஜா, தாய் ஐயம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அவரைத் தகாத முறையில் நடத்தவும் முயன்றுள்ளார். தன் கண்முன்னே வளர்ந்த மகனே தன்னைத் துன்புறுத்தியதைக் கண்டு நிலைகுலைந்துபோன ஐயம்மாள், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளார்.

தற்காப்பிற்காக ஆவேசப்பட்ட அவர், ராஜாவை கீழே தள்ளிவிட்டு, அருகில் கிடந்த இரும்பு கம்பியால் அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெத்த மகனே செத்துப்போனதை அடுத்து, பயந்துபோன ஐயம்மாள் அதை மறைக்கத் திட்டமிட்டுள்ளார். வீட்டின் அருகே கழிவறைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் ராஜாவின் உடலைத் தூக்கிப் போட்டுக் குழிதோண்டிப் புதைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளையும் தடயங்களையும் முற்றிலுமாகத் துடைத்துச் சுத்தப்படுத்தியுள்ளார்.

“என் மகன் எங்கேயோ போய்விட்டான்” என்று கடந்த சில மாதங்களாக ஊருக்குள் நாடகமாடி வந்துள்ளார். ஆனால், காவல்துறையினரின் ரகசியக் கண்காணிப்பு மற்றும் கிராம மக்களின் தொடர் சந்தேகத்தின் காரணமாக ஐயம்மாளுக்கு மன உளைச்சல் அதிகரித்துள்ளது. காவல்துறையின் பிடியில் சிக்கிவிடுவதை உணர்ந்த அவர், நேற்று கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று சரணடைந்து, தான் செய்த கொடூரக் குற்றத்தை உண்மையாக ஒப்புகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் மதுரை மக்களை உலுக்கியுள்ளது.