இயற்கை தனது கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தும்போது, மனிதன் படைத்த அத்தனை சாதனைகளும், நவீன தொழில்நுட்பங்களும் சில விநாடிகளில் தூசிபோல பறந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு பேரழிவைத்தான் தற்போது நேபாள நாடு சந்தித்து வருகிறது. நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கோரமான வெள்ளப்பெருக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. வீடுகள், உடைமைகள் என எல்லாவற்றையும் இழந்து மக்கள் தவித்து வரும் இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிழிந்து கண்ணீரை வரவழைத்துள்ளது.

வெள்ளம் கரைபுரண்டோடும் ஒரு நதிக்கரையில் நேபாளப் பெண் ஒருவர் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். அவரது கைகளில் ஒரு சிறிய தட்டில் கோதுமை மாவு இருக்கிறது. சுற்றிலும் தண்ணீர் அடித்துச் செல்லும் பயங்கரமான இரைச்சல், ஆக்ரோஷமாகப் பாய்ந்து செல்லும் அலைகள்… இந்தச் சூழலிலும் அந்தப் பெண் எந்தவித அச்சமும் இன்றி, மிகவும் அமைதியான மனதுடன் அந்த நதிக்கு பூஜை செய்கிறார்.

சிறிது சிறிதாக மாவைக் கிள்ளி நதியில் போடும் அவர், இரண்டு கைகளையும் கூப்பித் தன் தலையைச் சாய்த்து வணங்குகிறார். சில நேரங்களில் நிலத்தைத் தொட்டு அந்த நதிக்குத் தன் மரியாதையைச் செலுத்துகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் வெளிப்படுத்தும் செய்தி ஒன்றுதான்— “போதும் தாயே, உனது கோபத்தை நிறுத்து; இனிமேலும் கரையைத் தாண்டி வராதே!”

பெற்ற தாயிடம் சிறு தவறு செய்துவிட்டு மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதைப் போல, இயற்கை அன்னையிடம் தங்களுக்கு ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால் மன்னித்து விடும்படியும், தனது கோபத்தைத் தணித்துக்கொள்ளும்படியும் அந்தப் பெண் கண்ணீருடன் மன்றாடுகிறாள். உலகின் எந்த அதிநவீன இயந்திரத்தாலும் செய்ய முடியாததை, ஒரு சாதாரண மனிதரின் தூய்மையான நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்யும் விதம் காண்போரை உருக வைக்கிறது.

ரோகித் என்ற சமூக வலைதளப் பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெறும் ஒரு சாதாரண வழிபாட்டின் காட்சி அல்ல. இது பல நூற்றாண்டுகளாக இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள பந்தத்தின் வெளிப்பாடு. நமது கலாச்சாரத்தில் நதியை வெறும் நீரோடையாகப் பார்ப்பதில்லை; அதை நம் ‘தாயாக’ வணங்குகிறோம். துயரம் வரும்போது ஒரு குழந்தை தன் தாயிடம் ஓடிவந்து ஆறுதல் தேடுவதைப்போல, இந்த இக்கட்டான சூழலில் அந்தப் பெண் தன் அன்னையிடம் சரணடைந்துள்ளார். நவீன வளர்ச்சியின் பெயரால் நாம் இயற்கையை மென்மேலும் அழித்து வரும் காலகட்டத்தில், இந்தச் சிறிய வீடியோ நமக்கு உணர்த்தும் பாடம் மிகவும் ஆழமானது!