மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் தவித்து வந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அம்மாநில ராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவரை இழந்து ஆதரவற்று நின்ற பெண்ணின் வறுமையையும் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிகார பலத்துடன் இந்த கொடூரச் செயலை அந்த அதிகாரி அரங்கேற்றியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது கணவனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வழியின்றிப் போராடி வந்துள்ளார். அந்தச் சூழலில் அறிமுகமான அந்த பாதுகாப்பு அதிகாரி, அப்பெண்ணுக்கு மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி, திருமணம் செய்து கொள்வதாகப் போலி வாக்குறுதி அளித்துள்ளார்.
அதிகாரியின் வார்த்தைகளை உண்மை என நம்பிய அப்பெண்ணை, அவர் தொடர்ந்து பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, திருமண பேச்சு எடுத்தபோதெல்லாம் அந்த அதிகாரி ஏமாற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அவரை முற்றிலும் கைவிட முயன்றதாகவும் தெரிகிறது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தைரியமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மகாராஷ்டிர ராஜாங்க அமைச்சரின் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த அந்த நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் நாக்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு உயர் அதிகாரியே, ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிய சம்பவம் மகாராஷ்டிர அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
