சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணியில், நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் கடுமையான மதுபோதையில் சாலையில் நடுவே செய்த அநாகரிகச் செயல்களும், பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்ட நிகழ்வும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளார். உணவகத்திற்கு உள்ளேயும், பின்னர் சாலையிலும் நடந்து சென்றபோது, அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களைப் பார்த்து அந்தப் பெண் திடீரென ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த வழியாக வந்த கார் ஒன்றைச் சற்றும் யோசிக்காமல் தனது காலால் எட்டி உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் இந்த எதிர்பாராத மற்றும் அநாகரிகமான செயலால் அதிர்ந்துபோன அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அங்கிருந்த ஒருவர் அந்தப் பெண்ணின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார்.
View this post on Instagram
இதனால் அந்தப் பகுதியில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இந்த மோதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்தவர்களின் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் ஆவேசத்தில் இருந்து அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இளம்பெண் போதையில் இருந்ததால், உடனடியாக அவரது பெற்றோரைத் காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல்துறையினர், அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளையும் எச்சரிக்கையையும் வழங்கி அந்தப் பெண்ணை அவர்களுடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக புழல் பகுதியில் இரண்டு இளம் பெண்கள் மது போதையில் ரகளை செய்த நிலையில் அது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
