சமூக வலைதளங்கள் மனிதர்களை இணைப்பதோடு சில நேரங்களில் மோசமான ஆபத்துகளிலும் தள்ளிவிடுகின்றன என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைக் காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலனை சென்னை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் அமீர்சுகேல் (28). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த இவர், இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையை சேர்ந்த விவாகரத்து பெற்ற இளம்பெண் ஒருவருடன் பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, கடந்த 4 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். நேரில் சந்தித்து மிகவும் நெருக்கமாகவும் பழகியுள்ளனர்.
இதற்கிடையே, அமீர்சுகேல் வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். வெளிநாட்டில் வசித்தாலும் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், சூழல் கருதி அந்தப் பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். எனவே, தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், பழைய நினைவுகளை மறந்துவிடுமாறும் அமீர்சுகேலிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த அமீர்சுகேல், “உன்னை என்னால் மறக்க முடியாது; என்னுடன் உள்ள தொடர்பைத் துண்டிக்கக் கூடாது” என்று தொடர்ந்து வற்புறுத்தித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னைக்குத் திரும்பிய அவர், அந்தப் பெண்ணை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது, தன்னுடைய பாலியல் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், மீறினால் தாங்கள் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். சொன்னபடியே சில படங்களையும் அவர் இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அமீர்சுகேலுக்கு வேறு சில பெண்களுடனும் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது வெறுப்படைந்த அந்த இளம்பெண், துணிச்சலாக காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அமீர்சுகேலைத் தேடிப் பிடித்து நேற்று முன்தினம் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் காதலனின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
