பீகார் மாநிலத்தின் கைமூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘பர்வா கலான்’ கிராமம், கடந்த 53 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு திருமண வைபவத்தையும் காணாததால் “பிரம்மச்சாரிகளின் கிராமம்” என்று அழைக்கப்படுகிறது.
மேலும் சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஏதுமற்ற இந்த மலைக்கிராமத்திற்குத் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கப் பெற்றோர்கள் முன்வராததே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் இங்குள்ள சுமார் 200 பழங்குடியின குடும்பங்களில் மட்டும் 115-க்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணமாகாமல் வாழ்ந்து வருகின்றனர். கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் அவசர மருத்துவ வசதி இல்லாதது போன்ற கடினமான சூழலால், நிச்சயிக்கப்படும் திருமணங்கள் கூடப் பாதையிலேயே நின்றுபோகின்றன.
இந்த கிராமத்தில் முறையான சாலைகள் இல்லாததால், நோயாளிகளைக் கூட போர்வை அல்லது படுக்கையில் சுமந்து கொண்டு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மின்சாரத்திற்குச் சூரிய சக்தி பேனல்களை மட்டுமே நம்பியிருக்கும் இவர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பும் எட்டாக்கனியாகவே உள்ளது.
இக்கிராமத்தின் அவலநிலையை மாற்ற அரசு சுற்றுலாத் தலமாக அறிவித்தாலும், தங்களுக்குத் தேவையானது வெறும் அங்கீகாரம் அல்ல, கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான சாலை, தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தான் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அடிப்படை வசதிகள் மேம்பட்டால் மட்டுமே இங்கு மீண்டும் திருமண மேளச் சத்தம் கேட்கும் என்பது அக்கிராம இளைஞர்களின் ஏக்கமாகும்.
