தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பல்லவி. தேர்தல் பிரசாரத்தின் போதே நிறைமாத கர்ப்பிணியாக வலம் வந்த இவருக்கு, அண்மையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த உடனே, அதற்கு ‘டி.வி.கே.’ (TVK) என்று பெயர் வைக்கப் போவதாக அவர் அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்பதாகும். அதன் சுருக்கமான ‘டி.வி.கே.’ என்ற பெயரையே தன் மகனுக்குச் சூட்ட பல்லவி ஆசைப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க பல்லவி எம்.எல்.ஏ. வருகை தந்தார். பேரவை வளாகத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட அவர், பெண் எம்.எல்.ஏ.க்களுக்கான அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டுத் திரும்பினார். இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்குத் தனது கைக் குழந்தையுடன் வந்த பல்லவி, சட்டமன்றக் கூட்டம் முடிந்து முதலமைச்சர் விஜய் தனது வீட்டுக்குப் புறப்பட்ட நேரத்தில் அவரை நேரில் சந்தித்தார். அப்போது குழந்தையைக் கைகளில் வாங்கி உச்சிமுகர்ந்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய், அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு ‘தமிழ் வெற்றி கொண்டான்’ என்று பெயர் சூட்டினார். இதன் சுருக்கமும் ‘டி.வி.கே.’ என்பதால், தன் மகனுக்கு ‘டி.வி.கே.’ எனப் பெயரிட வேண்டும் என்ற த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. பல்லவியின் நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
