மஹாராஷ்ட்டிரா மாநிலம் லோனாவாலா அருகே உள்ள லோஹகாட் கோட்டையில் ட்ரெக்கிங் சென்றபோது, 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த புனேவைச் சேர்ந்த 26 வயது ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் கேதன் விஷால் அகர்வால் மரணத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது பலத்த காற்றில் நிலைதடுமாறி விழுந்த விபத்து மரணம் அல்ல என்றும், அவரது நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்தே கேதனை திட்டமிட்டு பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்துள்ளனர் என்றும் புனே போலீசார் இன்று அதிரடியாகத் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 18 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது கொலையில் தொடர்புடைய மணப்பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, ஜூன் 19 அன்று போலீசார் வெளியிட்ட தகவலில், கேதன் கோட்டையின் விளிம்பில் நின்று புகைப்படம் எடுத்தபோது கடுமையான காற்றின் காரணமாக நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டதாகக் கூறி, விபத்து மரணமாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அது விபத்தல்ல, திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்துள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ் தாய்டே, கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை போலீசார் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் போலீசார் மற்றும் அவசரக்கால மீட்புக் குழு’வினர் இணைந்து சுமார் 3 மணி நேரம் போராடி கேதனின் உடலை மீட்டனர். வரும் நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடக்கவிருந்த நிலையில், இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.
