மஹாராஷ்ட்டிரா லோனாவாலா லோஹகாட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் விஷால் அகர்வால் 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம், விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது  போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலை வழக்கில் கேதனின் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் சியா கோயல் மற்றும் அவரது ஆண் நண்பர் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அ

வர்கள் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உதய்பூரில் உள்ள அரண்மனையில் பிரமாண்டமாகத் திருமணம் நடக்கவிருந்த நிலையில், கேதனுக்கும் சியாவிற்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் ஏற்பட்டு வந்ததால், சியா தனது காதலனுடன்  சேர்ந்து கேதனைத் தீர்த்துக்கட்ட இந்த பயங்கர சதியைத் தீட்டியுள்ளார்.

போலீஸ் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் மற்றும் இன்ஸ்பெக்டர் தினேஷ் தாய்டே ஆகியோர் வெளியிட்டுள்ள தகவலின்படி, சம்பவத்தன்று கேதனும் சியாவும் லோஹகாட் கோட்டைக்குச் சென்றபோது, அவர்களுக்குத் தெரியாமல் சேத்தன் சவுத்ரியும் அவர்களைப் பின்தொடர்ந்து கோட்டைக்குச் சென்றுள்ளார். அவர்கள் மூவரும் கோட்டையின் செங்குத்தான விளிம்பிற்கு அருகே நின்றுகொண்டிருந்தபோது, சேத்தன் சவுத்ரி திடீரென கேதனைப் பின்னால் இருந்து பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சியா கோயல் சொந்தமாகப் பேக்கரி தொழில் செய்து வருகிறார், சேத்தன் சவுத்ரி மார்க்கெட் யார்டு பகுதியில் உலர் பழங்கள் (Dry Fruit) வியாபாரம் செய்து வருகிறார். தொழிலின் காரணமாக கடந்த ஓராண்டாக பழகி வந்த இவர்கள் இருவரும் இணைந்து, கடுமையான காற்றில் புகைப்படம் எடுத்தபோது கால் தவறி விழுந்தது போன்ற விபத்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிவ்துர்க் மித்ரா குழுவினரால் கேதனின் உடல் மீட்கப்பட்ட நிலையில், லோனாவாலா ரூரல் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை சம்பவம் போன்று நடந்துள்ள இந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.