அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தி வழித்தடத்தை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்கள் மீது அமெரிக்கா பயங்கரமான தாக்குதல்களை நடத்தும் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

ஈரானை ‘கற்காலத்திற்கு’ கொண்டு செல்வோம் என எச்சரித்துள்ள டிரம்ப், அந்நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் 110-க்கும் மேற்பட்ட எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் புஷெர் அணுமின் நிலையம் ஆகியவற்றைக் குறிவைக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள ஈரானின் நவீன கட்டுமானமான ‘B1’ பாலத்தை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்கி அழித்துள்ளன. இது போன்ற முக்கியப் பாலங்களைத் தகர்ப்பதன் மூலம் ஈரானின் நகரங்களுக்கு இடையேயான தொடர்பைத் துண்டித்து, அந்நாட்டைத் தனிமைப்படுத்த டிரம்ப் முயல்கிறார்.

ஈரானிடம் சுமார் 90 கிகாவாட் மின் உற்பத்தித் திறனும், கருண்-4 போன்ற பிரம்மாண்டமான பாலங்களும் உள்ளன. டிரம்பின் இந்த 48 மணி நேரக் கெடு முடிவடையும் தருவாயில், ஈரானின் உள்கட்டமைப்புகள் சிதறடிக்கப்படுமா அல்லது ஈரான் பணிந்து போகுமா என்ற பதற்றம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.