தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த டிராலி பையிலிருந்து, 18 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ஹயாதுன் நிஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக மணிப்பூரைச் சேர்ந்த 22 வயதான மணிகுதீன் லஷ்கர் என்பவரையும், அவரது மனைவி பகவதி மாஜியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 38 வயதான ஹயாதுன் நிஷா, இளைஞர் மணிகுதீனின் காதலி என்றும், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 350 கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து டிராலி பையை ரயிலில் ஏற்றியது அம்பலமானது. காதலி ஹயாதுன் நிஷாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, மணிகுதீன் தனது மனைவியுடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

கொலைக்குப்பின் பெண்ணின் உடலைக் கட்டர் மூலம் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதில் சில பாகங்களை மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து அழித்தொழிக்க முயன்றுள்ளனர். பின்னர் எஞ்சிய 18 உடல் பாகங்களைப் பாலிதீன் பைகளில் சுற்றி டிராலி பையில் அடைத்து ஆக்ராவிற்குச் செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டு மணிப்பூருக்குத் தப்பியுள்ளனர்.

ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பையிலிருந்து ரத்தம் கசிவதைப் பார்த்த பயணிகள் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பிறகே இந்த விபரீதச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக ஆக்ரா ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணை சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.