பீகார் மாநிலம் அருகே, 22 வயதான பிரணய் குமார் பார்தியின் இருசக்கர வாகனம் கல்லூரி மாணவர்களின் ஸ்கார்பியோ காரின் மீது மோதியுள்ளது. இந்தச் சிறிய விபத்து காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பெரிய கலவரமாக மாறியது.
வாக்குவாதம் முற்றியதால் பிரணாய் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், எதிர்ப் தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவாளர்களைத் தொடர்புகொண்டு வரவழைத்தனர். பாகோதர் கிராமத்தைச் சேர்ந்த நீரஜ் குமார் மற்றும் போச்சடி டான் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய நபர்கள் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
அப்பகுதிக்கு வந்த அடியாட்கள் பிரணாயைத் துரத்திச் சென்று கண்மூடித்தமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் மனிஷ் பார்தியின் மகனான பிரணாயை, அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.
இளைஞரின் மரணச் செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிசுவா-நவாடா பிரதான சாலையை மறித்து வாகனங்களைச் சேதப்படுத்தியதுடன், கடைகளையும் அடைக்க வைத்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ஹிசுவா காவல் நிலைய அதிகாரி மிருத்யுஞ்சய் குமார் தலைமையில் பெரும் காவல் படை குவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து ஒரு ஸ்கார்பியோ, பிரெஸ்ஸா கார் மற்றும் புல்லட் வாகனங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து தடய அறிவியல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொலையாளிகளை அடையாளம் காணத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
