உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த என்.சி.எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராமசங்கர் மிஸ்ரா (42) என்பவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம், காவல்துறையின் தீவிர விசாரணையில் கொடூரக் கொலையாக மாறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராமசங்கர் வழக்கமாக மாலை 5 மணிக்குத்தான் பணி முடிந்து வீடு திரும்புவார். ஆனால், ஆகஸ்ட் 22 அன்று மதியம் 3 மணிக்கே எதிர்பாராத விதமாக வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி பிரியங்கா வேறொரு நபருடன் வீட்டில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கண்டித்துள்ளார். இதனால் எழுந்த வாக்குவாதத்தில், மனைவியும் அவரது காதலன் விகாஸ் சௌஹானும் சேர்ந்து ராமசங்கரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தைச் சாலை விபத்து போலக் காட்டத் திட்டமிட்ட விகாஸ் சௌஹான், தனது நண்பர்களான அனுராக் சிங் மற்றும் சோனு குப்தா ஆகியோரை அழைத்துள்ளார். நால்வரும் சேர்ந்து ராமசங்கரின் உடலைத் துணியில் சுற்றி, பீனா ஸ்டேடியம் அருகிலுள்ள சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளனர். மறுநாள் உடல் மீட்கப்பட்டு ஆரம்பத்தில் விபத்து என்றே கருதப்பட்டது.

ஆனால், ராமசங்கரின் குடும்பத்தினர் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பியதால், வட்ட அதிகாரி ஹர்ஷ் பாண்டே தலைமையிலான காவல்துறையினர் அலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தடயங்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரமும் கொலையின் பின்னணியும் அப்பட்டமாக அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட மனைவி பிரியங்கா, அவரது காதலன் விகாஸ் சௌஹான், கூட்டாளிகள் அனுராக் சிங் மற்றும் சோனு குப்தா ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். “கணவன் வழக்கம்போல 5 மணிக்கு வந்திருந்தால் உயிரோடு தப்பித்திருப்பார்” என்று கைதான மனைவி கூறிய வாக்குமூலம் காவலர்களை உரைய வைத்துள்ளது.