இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய வெளிநாட்டுச் சுற்றுப்பயணத் தோல்விகள் மற்றும் வீரர்களின் தொடர்ச்சியான காயம் தொடர்பான சிக்கல்கள் குறித்து விவாதிக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்  தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம், இந்திய அணியின் எதிர்காலப் பாதையை நிர்ணயிப்பதில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நிறைவடைந்த வெளிநாட்டு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

 

கடந்த ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 0-2 என்ற கணக்கில் இழந்து, தனது 16 தொடர் வெற்றிகளின் தொடர் சாதனையைத் தொலைத்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 4-0 என முழுமையாக இழந்ததுடன், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் வரவிருக்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தைக் கருத்தில் கொண்டு, அணியின் தேர்வுக் குழு, பயிற்சி மற்றும் கிரிக்கெட் மேம்பாட்டுப் பிரிவுகள் ஒரே நேர்கோட்டில் செயல்படுவதை உறுதி செய்ய பிசிசிஐ இந்த உயர் மட்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்ச்சியாக முக்கிய வீரர்கள் காயமடைவது மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பின் மீதான விமர்சனங்கள் இந்தக் கூட்டத்தின் முக்கிய பேசுபொருளாக இருக்கின்றன. காயமடைந்த வீரர்கள், மருத்துவக் குழு மற்றும் தேர்வுக் குழுவிற்கு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாதது குறித்து வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. சில முக்கிய தொடர்களின்போது வீரர்களின் பிட்னஸ் நிலை குறித்த முறையான தகவல்கள் தேர்வுக் குழுவுக்குத் தாமதமாகக் கிடைத்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்திய பிரீமியர் லீக் தொடருக்குப் பின் வீரர்களின் பணிச்சுமை அதிகரிப்பதும், அதனால் அவர்கள் முழு உடற்தகுதியுடன் சர்வதேசப் போட்டிகளுக்குக் கிடைக்காமல் போவதும் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கிய பந்துவீச்சாளர்களின் பணிச்சுமையை நிர்வகித்தல் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற முன்னணி வீரர்களின் உடற்தகுதி மற்றும் பந்துவீச்சு வரம்புகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.வீரர்களின் தேர்வு முறைகள், காயங்களிலிருந்து மீளும் முறைகள் மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ள இந்தக் கூட்டத்தின் முடிவுகள் இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.