மகளிர் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் சென்ட்ரல் டெல்லி குவீன்ஸ் அணியின் இளம் லெக்-ஸ்பின்னர் மேதாவி பிதுரி தனது வித்தியாசமான கொண்டாட்டத்தின் மூலம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறார். குறிப்பாக இவர் செய்யும் ‘6-7’ கொண்டாட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது ஜெர்சி எண் 67-ஐ குறிக்கும் வகையில், கைகளை மாற்றி மாற்றி அசைத்து இவர் செய்யும் ‘6-7’ கொண்டாட்டம் Gen-Z ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

தொடக்க ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த விசித்திரமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய மேதாவி, ஒரே இரவில் சமூக வலைதளங்களின் சென்சேஷனாக மாறினார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டிக்குப் பின் நடந்த கொண்டாட்டத்தின் போது, மேதாவி பிதுரி தனது டிரேட்மார்க் ‘6-7’ செய்கையை உற்சாகமாகச் செய்துகொண்டே பின்னோக்கி நகர்ந்துள்ளார்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த மைதானப் பணியாளர்  மீது மோதினார்.கடும் உற்சாகத்தில் தங்களை மறந்து கொண்டாடும் விளையாட்டு வீரர்களுக்கு இது போன்ற சின்னச் சின்ன சுவாரசியமான தருணங்கள் கூடுதல் நகைச்சுவைகளைக் கூட்டுவது வழக்கம். அந்த வகையில், மேதாவியின் இந்தத் தமாசான தருணம் தற்போது இணையத்தில் மேலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. “இனிமேல் கொண்டாடும்போது பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் போல!” என்று ரசிகர்கள் இதனை கலகலப்பாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.