ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டி 20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த க்ருணால் பாண்டியா, இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்வுக் குழு அறிவித்த ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதைக் குறிக்கும் வகையில், அணியின் அறிவிப்புக்குப் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Hope is still alive” (நம்பிக்கை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது) என்று குறிப்பிட்டு, கைவிரல்களை ஒன்றாகச் சேர்த்துப் பிடிக்கும் எமோஜி  மற்றும் இந்தியக் தேசியக் கொடியை இணைத்து அவர் பதிவிட்டார்.

 

இந்தச் பதிவு சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலானதுடன், தேசிய அணிக்குத் திரும்புவதற்கான தனது முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்ற அவரது உறுதியை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடாத க்ருணால் பாண்டியா, சமீபகாலமாக தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் அமர்க்களப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர், 9 இன்னிங்ஸ்களில் 226 ரன்களை விளாசியதுடன், 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். டொமஸ்டிக் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ள அவர், 4 இன்னிங்ஸ்களில் 65 சராசரியுடன் 130 ரன்களும், சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஃபார்மில் உள்ளார். இத்தனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் இடங்களுக்கு அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு தேர்வுக் குழு வாய்ப்பளித்துள்ளது. இந்தியாவின் தற்போதைய திட்டங்களில் தனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் க்ருணால் பாண்டியா காத்திருப்பது அவரது இந்தப் பதிவின் மூலம் தெளிவாகியுள்ளது.